Saturday, December 12, 2009

பிராணாயாம மண்டலங்கள்



-->
மெய்யன்பர்களே,
                              
பிராணாயாம நெடுந்தொடரை உங்களுக்கு அளிக்க இருக்கும் என் எல்லையில்லா மனமகிழ்வினை என்னுடைய குருநாதருக்கு சமர்ப்பிக்கையில் ஏற்படும் மன நிறைவு எத்தகையதோ அப்படியே  இதைக் கற்று உணர்பவர்களுக்கும் ஏற்பட வேண்டும் எனவும் யோக பலன்கள் யாவும் பெற்று உய்ய வேண்டும் எனவும் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் திருவடிகளை வணங்கித் தொடர்  தடையின்றித் தொடர வேண்டும் என நினைந்து தொடர விழைகின்றேன் .

         
ரிஷிகள் கூறியுள்ளபடி யோக உண்மைகள் என்பது தத்துவங்களில் இருப்பதால் அதனைப் பலவாறாய் விளக்கப்படுவதாலும் அது பற்றி பயிற்சியற்றவர்களுக்கு தெளிவற்றிருப்பது போலத் தோன்றிடினும் நற்பயிற்சியின் மூலம் வெற்றிகிட்டும் காலத்தில் மேற்கூறிய தத்துவ விளக்கங்கள் பற்றி பல உண்மைகள் தெள்ளத் தெளிவாய் புலப்பட்டு விடும்துவக்க காலத்தில் சிலருக்கு மிகக் குறைந்த அளவே விளங்குவதால்  அவர்கள் யோகத்தைபிராணயாமத்தை முழுதும் ஒப்புக்கொள்ள மறுப்பதோடு சலிப்பு காரணமாக தொடர்வதும் இல்லை.   தீவிர பயிற்சியும் நம்பிக்கையும் கொண்டவர்களால் மட்டுமே குறித்த இலக்கை அடையமுடியும்.
                         
ரத்தம் , தசை , நரம்பு, சதை மற்றும் எலும்புகளால் ஆன தூல உடலில் சூக்கும வடிவாய் (அரூப வடிவில்) ஆறு சக்கரங்கள் இடம் பெற்றுள்ளதை ஏற்கனவே பார்த்தோம்.  இவை யாவும்  முதுகந்தண்டின் கீழிருந்து மேலாக அமைந்துள்ளது. மூலாதாரம் துவங்கி ஆக்ஞை வரை ஆறாதாரத் தளங்களாய் அந்நெடு ந்தண்டில் வாசல்கள் அமைத்துக் கொண்டு அதனதன் வழியே ஆற்றல்களை வெளிப்படுத்தி விருத்தி செய்கின்றன குதம், குய்யம், (எருவாய், கருவாய்) என்ற இரண்டினூடே  (நடுவே) பிரகாசித்து அதன் பரவலை விரிக்குமிடம் மூலாதாரம்.


சுவாசத்தின் (பிராணனின்)  இருப்பிடமான குறி  (கருவாய் )பிரதேசம் ஸ்வாதிட்டானம்    (சுவாசம் + அதிட்டானம்) பெயருடன் வெளிப்படுகின்றது.
தொப்பூழ்  எனப்படும் நாபித்தளம் மகார அட்சரமான ம் என்ற ஒலியேற்றப் பெருந்தளமான மணிபூரகம்  சக்கர வியாபகப் பிரதேசமாகும்

ஓங்கார என்ற நாத  (சப்தம்)  அதிர்வு ஒலியை மேற்கொண்டு இதய பாகத்தில் இருந்து  (அனாஹதமாய்) எப்போதும்  எழுப்பியவாறு இயங்கி வரும் தளமே அனாஹதம் ஆகும்.

ஆகாய தத்துவமாயும் , ஆகாயத்தளமாயும் ஆகாச பீஜமுமான ஹம்  மந்திர வடிவாய் இயங்கி வளரும் விசுத்தம் என்றாகிய  (மார்புக்கு மேலும், தலைக்கு கீழும்) அமைந்துள்ள கண்டம் எனும் கழுத்துப் பகுதியே விசுத்தி சக்கர தளமாகும். 

கண்நுதல் எனப்படும் நெற்றியின் நடுக்கீழும், இரு கண்களின் மேல் புருவ நடுப் பாகத்தும் விளங்கும் அவ்விடமே மனதின் உள்முகம் காணும் பிரதேசம் எனவும்
 அகக் கண்களின் ஒளி மண்டலப் பகுதி எனவும் பெரு  ஞானப்  பிரவாக அறிவிப்புக்களமான ஆக்ஞை என்ற பேருண்மைத் தளச் சக்கரமாகும்
மேற்கூறிய அத்தனை சக்கர சக்திகளை   ஒவ்வொன்றாகவும் , ஒரு சேரவும், அதனதன்ஆற்றல்களைத் தூண்டி எழுப்பிவிடவும் இயக்கவும் ஞான வீட்டின் திறவுகோலான இருகாலாகிய சுவாச நெறி என்ற பிராணாயாமம் ஆகும். பிராணாயமத்தின் உருவம் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவைகள் 16  ஆகும்.
1 )
அண்ட பிண்ட மண்டலம்
2 )
பிராண மண்டலம்
3 )
முக மண்டலம்
4 )
சுவாச கோச மண்டலம்( சுவாச, நிசுவாச, )சுவாசபேதம்
5 )
ரத்த மண்டலம்
6 )
நாடி மண்டலம்
7 )
சக்கர மண்டலம்
8 )
அஸ்தி மண்டலம்
9 )
காலதேச மண்டலம்
10 )
கியாதி மண்டலம்
11 )
பரமாணு மண்டலம்
 12 )
பிரக்ஞா மண்டலம்
13 )
அணு பிரக்ஞா மண்டலம்
14 )
சூட்சம பிராப்தி மண்டலம்
15 )
நாத , ரூப , காந்தி மண்டலம்
16 )
பரபிரம்ம மண்டலம்
உயிரின் ஆதாரம் எனப்படும் பிராண வாயு (உயிர்காற்று) வாசியினைக் கொண்டு இடகலை, பிங்கலை, (இடம், வலம்) என மாற்றி , ஏற்றி இறக்கும் பிராணாயமத்தின் பல்நிலை வித்தையின்செயல்பாடாகும்.
                        ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
                          காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை
                         காற்றைப் பிடிக்குங் கணக்கறி  வாளர்க்குக்
                         கூற்றை உதைக்குங் குரியது வாமே
                                                                                                   திருமூலர்
உள்ளிழுத்து , உள்ளடக்கி, வெளிவிட்டு, வெளித்தங்கி விளையாடும் விளையாட்டே சித்தர்களின் தலையாய பணியும் பொழுதுபோக்கும் ஆகும்  . பூரக , ரேசக, கும்பக , தம்பன  என்ற   நால்வழி சுவாசப்பணிகள் முறையே
மூச்சை உள்ளிழுத்தல்,
மூச்சை உள் நிறுத்தல்
மூச்சைவெளிவிடல்,
 மீண்டும் மூச்சிழுக்கக் காத்திருத்தல்
எனவாறு இவைகளை கால நிர்ணயத்தின் படி, (மாத்திரை), செயல்படுத்துவதோடு தொடர்ந்த பயிற்சி செய்தல் மற்றும் ஒவ்வொரு சுவாச செயல்களின் மூலம்
 மனத் தொடுகை (மனத்தொடர்பு)   நாதம், மந்திரம் என்ற (ஒலித்தொடர்பு)
 தேஜஸ், பிரபை என்ற (ஒளித்தொடர்பு) தேசம் என்ற சுவாசப் பரவலின் நிற்கும் தூரம்
(வெளி நீள் தொடர்பு) எனவாறு பல்வகைப் பாடத் திட்டங்களை சித்தர்கள் உபதேசித்துள்ளனர் .                   
     மனித உடலில் சங்கமித்த ஆன்மாவுடன் உறவு கொண்ட உயிரை (சீவனை) அண்டத்துடன்  இணைக்கவும் அவ்விணைப்பின்  நுட்பமிகு கருவிகளாகவும் , களங்களாகவும் ,விளங்குபவையே, முன் சொன்ன 16  மண்டலங்கள் ஆகும். யாதொரு சுவாசப் பயன்பாட்டினையும்  பிராணமயமாக்கல் , வெவ்வேறு வித ஆற்றல்மிகு பலன்களைத் தருகின்றது புதிர்மிக்க இந்த கலையினை ஆயுட்காலம் முழுதும்  கற்றுக் கொண்டே இருக்கலாம் மனித பூரண ஆயுட்காலம் 120 வாழ்வாண்டு என்பர் .
இக்காலவரை  இக்கலைக்கு ஒரு பொருட்டே அல்ல
 பொதுவாக சராசரி மனித ஆயுட்காலம் போதாதேன்பதே உண்மை. இதன் அடிப்படையில் இக்கலையினாலே ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்ளவும் இயலும் என  இருடிகள்(ரிஷிகள்)  கூறியுள்ளனர்.
பிராணாயாமத் துணை கொண்டு உள நோய் தீர்ந்து பெரு மகிழ்வெய்தி பேருணர்வாற்றல் பெறலாம் தீரா உடல் நோய் எதுவாக இருப்பினும்கொடிய மரபு வழி நோயாயினும் வல்வினை நோயாயினும் தீர்ப்பதற்கோர் அருமருந்தென பிராணாயாமத்தை அடையாளம் காட்டியுள்ளன. இன்றும் பிறவி நோய்க்கும் கூட அஃது  தொடராதிருக்கவும் இக்கலையின் மூலமே நிவாரணம் பெறலாம் என மகான்கள் இயம்பியுள்ளனர்.
மானுடர்தம் துன்பம் , நிறைவின்மை, நிலையாமை, போன்ற முக்குறைகள் நிறைந்த லோகாதயமான இப்புவிவாழ்வின் இயல்பதனை உணர்ந்து அதனின்றும் முற்றிலும் விடுபட்டு இன்பம், நிறைவு , நிலைப்பு போன்ற பூரண அனுபவங்களைப்  பெற சித்தர்கள் கூறும் மெய்ஞான வழி போந்து. சர சாஸ்த்திரத்தின் மூலம் யோக சாஸ்த்திர பெரு வீட்டின் படிகளாகிய இயம , நியம, ஆசன, பிராணாயாம , பிரத்யஹார, தாரணை , தியானம் , சமாதி  என்ற இறை மாளிகை  அடையும் விரிவாக்கப் பயிற்சியினை இந்த உலகிற்கு அளித்த சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் திருப்பாதம் பணிந்தேற்றிப் பிராணாயாமந்தனை பயிலத்துவங்குவோமாக.

வேதசாரம் எனக் கூறப்படும் பல்வேறு உபநிஷத்துக்களுள் ஒன்றான
பிரச்னோபநிஷத்தில்  பிப்பலாத முனிவர் கூறிய பிராண அபானனைப் பற்றிய  உபதேசத்தைப் பார்ப்போம்.

யதுச் சுவாஸ - நிச் ஸ்வாசா
வேதா- வாஹீதி ஸமம் நயதீ தி ஸ ஸமான்:!
மனோ  -  வாவ யஜ மான:
இஷ்ட பல -மேவோ தான ஸ ஏ ந ம் யஜமானம்  
அஹர ஹர் - ப் ர ஹ் ம கமயதி.
இதன் விளக்கம் அடுத்த பதிவில் தொடரும்.

1 comment:

  1. பயனுள்ள பதிவு! பிராணயாமத்தினை பயிலும் ஆவல் அதிகரிக்கிறது. அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment