Saturday, March 27, 2010

ஆஹா யோகா

                     ஆஹா யோகா
                                                              

மருந்தில்லா மருத்துவம் யோகக் கலை.
அது நமது ரிஷிகள் நமக்கு அளித்த கொடை.
பதஞ்சலி மகரிஷி யோகத்தை நமக்கு தொகுத்தளித்தார். அது இந்தியாவின் பெரும் செல்வம்.
அந்தோ பரிதாப நிலை.



இன்று யோகக் கலை சரியான புரிதல் இல்லாமல் வியாபாரம் ஆகி விட்டது.

பெரும்பாலோனார் இதை வெறும் உடல் பயிற்சியாக கருதுவதும், மற்றவர்கள் இது தமக்கு ஒவ்வாதது என விலகி நின்று பார்க்கின்றனர்.  யோகப் பயிற்சியின் விளைவுகள் என்பது நன்மை தரக் கூடியவை என நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. விஞ்ஞான ரீதியாகவும் அவை நிரூபிக்கப் பட்டவை. 

யோகத்தின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றுவர்கள் யாராக இருந்தாலும் இறைக் கலப்பு என்பது அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஒன்று.

இன்றைய விஞ்ஞான உலகில் நிரூபிக்கப்படாமல் எதுவும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.  இத்தகைய அரிய   யோகச் செல்வத்தை மேலை நாட்டவர்கள் குறிப்பாக ரஷ்யாவும், சீனாவும் இதில் பல ஆய்வுகளை நடத்தி வெற்றிகரமாக கையாளுகின்றனர்.

ஆனால் இங்கே என்ன நிலை ?
நமக்கு நாமே இதை கேலி பேசிக் கொண்டிருக்கிறோம்.

பொதுவாக இன்றைய சூழ்நிலையில் மக்கள் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதைப் போல நோயுற்று இறப்பவர்களின்  எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.  நோயற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம் என்று யாராலும் இன்று மகிழ்வாக சொல்ல முடியவில்லை.
மாறி வரும் உணவுப் பழக்க வழக்கங்களும் , நாகரீகமும் நம்மை உடல் மற்றும் மனச் சிக்கல்களுக்கும் ஆளாக்கி நம் வாழ்வை சீர் குலைக்கின்றன.

எல்லோராலும் தீராத வியாதிகளுக்கும்  பொருட் செலவு செய்து தன் உடம்பை செம்மை செய்து கொள்ள முடியுமா.?   அன்றாட பொழுதை துன்பமில்லாமல் கழிப்பதற்கே இன்று ஒவ்வொரு மனிதனும் என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை நம்மைப் போன்ற மனிதர்கள் நீங்களும் அறிவீர்கள்.

இதற்கெல்லாம் என்ன தீர்வு ?

யோகம் பயில்தல் ஒன்றே இதற்கு தீர்வு.

  நீங்கள் கேட்கலாம் -
யோகம் என்றால் கால்களை , கைகளை நீட்டி மடக்கி எப்படி வயதானவர்கள்  பயிற்சி செய்வது?
எல்லோராலும் முடியாதே. மற்றும் சிலர் இது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தாக உள்ளதே என்று கூறுகின்றனர்.

கால்களை , கைகளை நீட்டி மடக்கி செய்யும் ஆசனப் பயிற்சிகள் என்பது யோகப்பயிற்சியின்   ஒரு அங்கம் . மனிதர்களின் வயது மற்றும் தன்மைகளுக்கு ஏற்ப சிறிது ஆசனப் பயிற்சி செய்தால் போதுமானது.

யோகப் பயிற்சியின் நோக்கம் மனிதன் தன் சுயத்தை உணர்ந்து இறைவன் என்பதை அறிந்து முடிவில் இறைக் கலப்பு அடைவதே.

ஆனால் அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட சிறிதளவு யோகப் பயிற்சியினை கையாண்டாலும் அது  மனிதனின் உடல் மற்றும் மன நலத்தை சீர்ப்படுத்தும் ஒரு மருந்தாய் அமைகின்றது என்பதில் வியப்பில்லை.

உடல் , மன சக்திகாகவும் மற்றும் ஜீவ முக்திக்காகவும் இன்று யோகத்தை ஆர்வத்துடன் பயில்பவர்கள் ஏராளம், ஏராளம்.

இதற்காக இன்று கடை விரித்தார் போல் பற்பல யோக மையங்கள் நிறைய உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை தாமே யோகப் பயிற்சிகளை கண்டு பிடித்தது போலவும் , ஒரு புகழுக்காக, பெயருக்காக (popularity ) க்காக  தங்கள் பெயரிலே அமைத்துக் கொண்டு , எளியப் பயிற்சிகள் எனவும் வியாபார ரீதியான பரப்புரை மேற்கொண்டு இருக்கின்றனர்.

ஒரு நிமிடம் இந்த யோகப் பயிற்சியனை நமக்களித்த உண்மைக் குருமார்களின் தூய நோக்கத்தினை அவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். தங்கள் வாழ்க்கையினை அதற்காக அவர்கள் அர்ப்பணித்து அதற்காக அவர்கள் சிறு புகழுக்கு கூட ஆசைப் படாமல் உலக உயிர்களின் மீது உள்ள கருணையினால் பயிற்சிகளை நெறிப்படுத்தி மனிதர்களின் தன்மைக்கு ஏற்றார்போல பயிற்சிகளை பயிற்றுவித்த ரிஷிகள், குருமார்கள் பற்றி இத்தகைய வியாபாரம் செய்வோர் மனதில் சிந்திப்பார்களேயானால் அவர்களும் தங்கள் நோக்கத்தை சீர்ப் படுத்திக் கொள்வார்கள்.

ஆரம்பத்தில் யோகம் பயில விரும்பும் , முயலும் அன்பர்கள் மிக்க மன விழிப்புடன் சரியான பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை சென்றடைந்து பயிற்சியினை அடிப்படை ஒழுக்கத்துடனும் , உயர்ந்த நோக்குடனும் பயில்வார்களேயானால் அவர்களுக்கு சத்குரு பதஞ்சலி மகரிஷியும், சித்த புருஷர்களும் அவர்களின் யோக வெற்றிக்கு துணை நிற்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

நிறைய பதிவுலக நண்பர்கள் யோகத்தை மின்னஞ்சல் வழியில் படிக்க முடியுமா என தொலைபேசி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாவும் கேட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் சொல்லிக் கொள்வது ஒன்றே தான். யோகப் பயிற்சிகளை புத்தகம் மூலமாகவோ , மின்னஞ்சல் மூலமாகவோ கற்றுக் கொள்ள முடியாது. சில அடிப்படை விஷயங்களை மட்டும் வேண்டுமானால் நாம் அவற்றின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மற்றபடி யோகப் பயிற்சிகள் சாதகரின் தன்மைக்கு ஏற்ப நேரடிப் பயிற்சிகள் மூலமே சாத்தியம்.

ஒவ்வொரு மனிதனும் சுய நலவாதியாக இருக்க வேண்டும் .(அதாவது சுயத்தின் நலம் நாடுபவராக இருக்க வேண்டும். )

ஒவ்வொரு மனிதருடைய சுயத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த பிரபஞ்சத்தின் சுயத்தை அதன் நலத்தை மேம்படுத்தலாம்.

அத்தகைய பணியினை இன்றைய உலகில் விளம்பர வெளிச்சமில்லாமல் , புகழுக்கும், பொருளுக்கும், சுய மனித போற்றுதலுக்கும் ஆசைப்படாமல் யோகத்தை பயிற்றுவிக்கும் ஆன்மீக சங்கங்கள் மற்றும் அன்பர்கள் இருக்கவே செய்கிறார்கள். அத்தகைய  நல்ல உள்ளங்களால் தான் இன்றும் நமது பாரதம் யோகக் கலையினை உலகுக்காக பெற்றெடுத்த பெருமையினை தாங்கிக் கொண்டிருக்கிறது.

                                                          இப்படிக்கு
                                                ஆன்மீக மெய்யன்பர்கள்
                                                 ஸ்வார்த்தம் சத் சங்கம்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment