Wednesday, December 29, 2010

ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு (31-40)

ஞாயிறை போற்றுவோம். நலம் காண்போம்  -7 
thanks to  ndep.nv.gov

சென்ற பதிவின் தொடர்ச்சி ................

 நெடு வழி செல்லும் ஆதவன், தாரகன் (ரக்ஷிப்பவன் ); ஓளி வீசி வானில் பிரகாசிப்பவன். அவனால் ஊக்கமடைந்த  பிராணிகளெல்லாம் தங்களுடைய செயல்களை செய்கின்றன. 

அம்ருதர்கள் ( அமுதம் உண்ணும் தேவர்கள் ) அவனுக்கென அமைத்துத் தந்த பாதையிலே , ஆதவன், பருந்தைப் போலப் பாய்ந்து செல்கிறான். 


 அடிவானத்தின் விளிம்பிலே ஓர் அரிய காட்சி அனைவரும் காணும் வண்ணம் தோன்றுகிறது. வெள்ளைக்குதிரைகள் பூட்டிய சூரிய மண்டலத்தில் விரைவாகச் செல்லும் தேவன் எழுகின்றான். 


அசையும் -அசையாப் பொருட்களுக்கு எல்லாம் அவன் தலைவன் . அனைவரின் நலன்கருதி உலகமெல்லாம் சுற்றுபவன். 
அந்த சூரியனைத் தாமாகவே இணங்கி வந்து ஏழு குதிரைகள் தாங்கிச் செல்கின்றன.


கதிரவன் இந்த உலகத்தின் கண்; அந்தக் கண் தேவர்க்கும் அனுகூலமானது.  சுத்தமானது. நாம் அந்தக் கண்ணை நூற்றாண்டுகள் கண்டு களிப்போமாக ; நூறாண்டுகள் ஜீவித்திருப்போமாக; 


சூரியனே ! நீயே மகான்; நீயே ஸத்யம். ஆதித்தனே ! நீயே மகான்.  
நீயே ஸத்யம். 
 நீ மகான் என்பதால் உன் மஹிமை போற்றதற்குகந்தது.



 சூரியனே . உன் புகழ் மஹிமை மிக்கது. தேவர்களுக்கிடையே  நீ மஹானாக விளங்குகிறாய். நீயே  ஸத்யம்.  ஸத்யமே அசுரர்களை அழிக்கிறது. ஆதவா ! தடைபடாத ஜோதியுள்ள நீ , தேவர்கட்கும் புரோஹிதன். 




மித்ரா வருணரின் கண்களாக விளங்கும் சூரிய பகவானை வணங்குங்கள். 
இரு பிறப்பாளனும் , தேவர்களுக்கிடையே தோன்றியவனும், மஹிமை மிக்கவனும், தூரத்ருஷ்டி உள்ளவனுமான சூரியனைக் குறித்து யக்ஞங்களைச் செய்யுங்கள். ஜோதியின் மைந்தனை ஏத்திப் பாடுங்கள். 






(உண்மையினை பேசுவோரது ) ஸத்ய மொழியால் ஓளி பரவுகின்றது. 
புவி இயங்குகிறது. இரவு பகல்கள் நிகழ்கின்றன. 
அலைக்கழியும் அனைத்தும் அமைதியுறுகின்றன.  (நதிகளில் ) நீர் பாய்ந்தோடுகிறது. கதிரவன் காலையிலே தவறாது எழுகின்றான். அத்தகைய ஸத்ய வசனம்  எங்களை எப்போதும் காக்கட்டும்.
(அதாவது , நாங்கள் ஸத்யமே  பேசிவர சூரிய தேவனின் அருள் ஸித்திக்கட்டும்.) 



 விரைவு மிக்கக் குதிரைகளை நீ உன் தேரில் பூட்டும் போது , சூரியனே ! எந்த அரக்கனும் உன் அருகில் இருக்க மாட்டான். நீ புத்தொளி பூண்டு கிளம்புங்க்காலை , உன் பழைய ஓளி உன்னைப் பின்தொடர்கின்றது.


வாழ்த்துதலும் , வணக்கமும் தொடரும்.


courtesy - ரிக் வேத மந்திர கோஸம்




1 comment:

TRANSLATE

Click to go to top
Click to comment