சென்ற பதிவில் சூரிய பகவானைப் போற்றும் ரிக் வேத மந்திர கோஸத்தில்
21 -30 வரையிலான ஸ்லோகங்களை பார்த்தோம் . அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் சூரியனைப் போற்றும் ஸ்லோகங்கள் 31- 40 வரை பார்ப்போம்.
பறவைகள் பொன்னிறமானவை. அவை கருத்துப் போய் இறங்குகின்றன. தங்களை தண்ணீரில் நனைத்துக் கொண்டு அவை மேலே எழும்புகின்றன. ருதத்தின் இருப்பிடமான ஆகாயத்திலிருந்து அவை மீண்டும் இறங்குகின்றன. உடனே பூமி நனைகிறது.
ததிக்ரான் என்றழைக்கப்படும் சூரியனின் ஒளியிலே வசிப்பது ஹம்ஸம் (அன்னம் ): வானிலே வசிப்பவன் வசு (காற்று ):
வேதிகையில் வசிப்பவள் ஹோதா என்ற அக்னி :
மனையில் வசிப்பவர் அதிதி :
மனிதர்களிடையே வசிப்பவன் சேதனன்.
உத்தம மண்டலத்தில் ஸத்யத்தில் வசிப்பவன் சூரியன் .
விண்ணில் வாயு நீரில் பிறந்தவன்.
பசுக்களிலே , ஒளிக்கீற்றிலே , ருதத்திலே , மலையிலே பிறந்தவர்கள் ஸத்யவான்கள் .
ஆதவனே ! ( பிற்காலத்தில் ராகு - கேது என்றழைக்கப் பட்ட ) ஸ்வர்பானு என்ற அசுர குலத்தினன் உன்னைத் துளைத்து இருளால் மூடிய போது , தாங்கள் எந்த இடத்தில இருக்கிறோம் என்பது கூடப் புரியாமல் உயிரினங்கள் ஸ்தம்பித்தன.
சூரியனே ! இன்று நீ உதயமாகுங்கால் , நாங்கள் குற்றமற்றவர்கள் என்ற உண்மையினை மித்ரா வருணரிடம் கூறுவாயாக. அதிதி எங்களைத் தேவர்களுக்கிடையே இருக்கச் செய்யட்டும். துதிகளால் மகிழும் அர்யம்நனுக்கு நாங்கள் பிரியமுள்ளவராவோமாக.
சூரியன் மகிமை மிக்க கிரணங்களை அனைவர் மீதும் வீசுகின்றான். பகலில் பிரகாசிக்கும் அவன் ஒருவனாகவே அனைவர்க்கும் தோன்றுகின்றான். அவன் சிறப்பாகத் தோற்றுவிக்கப்பட்டவன். சிறப்பாக செயல்படுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டவன். அவனை வழிபட்டுப் போற்றுவோம்.
சூரியனே ! எங்கள் துதிகளக் கேட்டு, வெள்ளைக் குதிரைகளிலேறி உயரே வரவும். நாங்கள் பாவமற்றவர்கள் என மித்ராவருணர் அர்யமா அக்னியிடம் உரைக்கவும்.
ஸத்யத்தை காப்பவர்களும் துன்பத்தை விலக்குபவர்களுமான மித்ராவருணரும் அக்னியும் எமக்கு ஆயிரக் கணக்கில் செல்வங்களை அளிப்பவராக. எங்கள் துதிகளுக்கிரங்கி எங்கள் இச்சைகளைப் பூர்த்தி செய்வாராக.
அண்டங்களை எல்லாம் தன் கண் கொண்டு பார்த்த வண்ணம், அனைவருக்கும் சமமாக அருள் பாலித்த வண்ணம், மித்ரா வருணர்களின் கண்களாகவும் செயல்பட்டுக் கொண்டு
இருளைப் பாய் போல சுருட்டிய வண்ணம் ஆதவன் எழுகின்றான்.
தண்ணீரை அளிக்கும் மகான் அவன்; ஜனங்களை உற்சாகப் படுத்துபவன்; கொடி உடைய ஒரு சக்கரத் தேரிலே வெள்ளைக் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு அந்த சூரியன் எழுகின்றான்.
வழிபடுபவர்களின் துதிகளால் உஷாதேவியின் அரவணைப்பிலிருந்து பிரகாசத்துடன் எழும் கதிரவன் , அனைவருக்கும் சமமாக , எது வரையறை அறிவிக்காமல் , ஒளியினை வழங்குகிறான்; செல்வங்களை அருள்கிறான்.
வாழ்த்துதலும், வணக்கமும் தொடரும் .
No comments:
Post a Comment