Friday, March 27, 2015

அருளுரை - ஆன்மீகமும் பதஞ்சலி யோகமும்

ஞான சபை வகுப்புகள்






அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரை
தத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை
தித்திதன் அஞ்சலரை பத்தித்து வந்தவரை
புத்தித்துப் போற்றிடவே எத்தித்தும் ஏந்தலாமே !

யோகேந சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சரீரஸ்யது வைத்ய கேன
யோகாப ரோத்தம் பிரவரம் முனீநாம்
பதஞ்சலிம் பிராஞ்ஐலி ராந தோஸ்மி




            அன்புள்ள மாணவச்செல்வங்களே! யோகத்தின் மிக நுட்பமான பாடங்களுக்குச் செல்வதற்கு முன்பாக  ஆன்மீகத்தின் ஆரம்பப் பாடத்திற்கு செல்வோம். ஆரம்பப் பாடம் என்றால் இப்போதெல்லாம் கற்கின்ற ஒன்றாம் வகுப்புக்கு முன்னால் Pre K.G, L.K.G U.K.G என்ற மூன்று நிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஆன்மீக ஞானத்திற்கு அப்படி ஏதும் இல்லை. எடுத்த எடுப்பிலயே முதல் வகுப்பிற்குச்செல்வோம். ஏனென்றால் ஏற்கனவே பல பிறவிகளில் நீங்கள் கற்றுத் தேர்ந்திருக்கிறீர்கள். பல விஷயங்களைக் கேட்டிருக்கிறீர்கள்


               ஆகையால் நமக்கு 1-ம் பாடத்தையே முதல் பாடமாக எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களைக் காட்டிலும்  ஒரு குடும்பஸ்தனுக்கு ஆன்மீகம் எளிதாக வருகிறது. ஏனெனில் அவனுடைய குழந்தைகளுக்கும் சரி, மனைவிக்கும் சரி உறவினர்களுக்கும், சரி ஏதாவது தடைகள் வந்திருக்கும் போது அது அவனைத் துன்பப்படுத்தியிருக்கும். பொதுவாக அவர்களின் மனோபாவத்திற்கு ஏற்ப பலம் அல்லது பலவீனம் அடைகிறான். அவன் பல இன்பங்கள், பலப்பலத் துன்பங்களுக்கு ஆளாகும் போது பல பாடங்களைக் கற்றுக் கொள்கிறான். 

       முதலில் பல விஷயத்தை பார்த்துப் பதறிபோகிறான். பிறகு அது வழக்கமாகி, எது பலம், எது பலவீனம் என்று அனுவபத்தின் மூலம் அவன் அறிகிறான். பிறகு இவைகள் விதியின் காரணமாகவும், சூழ்நிலை காரணமாகவும், தன் முயற்சியின் காரணமாகவும் நடக்கிறது என்று அவன் புரிந்து இறுதியில் இறைவன் ஓருவன் இருக்கிறான் என்று நம்புகிறான்.

      ஆகவே குடும்பஸ்தனுக்கு வெகுவிரைவில் ஆன்மீகத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

                                இது எதனால் வருகிறது என்று சொன்னால் பழக்கம். பழக்கம் என்று சொன்னால், அனுபவம். ஆகவே அனுபவம் தரும் பாடம் தான் ஒருவனை ஆன்மீகவாதியாக மாற்றுகிறது. இல்லையெனில் அவர்கள் மாறமாட்டார்கள். துன்பம் என்ற ஒன்று வருகின்ற போதுதான் ஆன்மீகம்  வருகிறது. அதே சமயம் துன்பம் வந்தால் தான் ஆன்மீகம் வரவேண்டும் என்ற பொருளுமில்லை, கட்டாயமுமில்லை.



            ஆன்மீகம், என்பது முன்ஜென்மத் தொடர்ச்சி, ஒவ்வொருவரும் அவர்கள் செய்த புண்ணியம், ஆக அதைப் பூர்வ புண்ணியம் என்றும் சொல்வார்கள். அதன் வழியாக வெகுவிரைவிலேயே ஆன்மீக ஞானம் வந்துவிடும். 

                      ஆகவே எவ்வாறு இருப்பினும் ஆன்மீக உணர்வு என்பது ஒரு ஒப்பற்ற உணர்வு.  எடுத்தவுடனேயே அது வருவதில்லை. சிறிது காலம்  அனுபவத்தின் பின்பு தான் வருகிறது. அப்படி வரும்போது தான் ஆன்மீகத்தை ஊன்றிப் பற்றித் திடமாக இருக்கமுடியும். ஆகவே மேலெழுந்த வாரியாக அதைக்கற்க முடியாது. ஆன்மீகத்திற்கு என்று எந்த ஒரு வகுப்புமில்லை. எந்த ஒரு பாடமும் இல்லை. 


                பண்டையகால வேதங்களும், இதிகாசங்களும், மற்ற அனைவருடைய அனுபவப் பாடங்களும் மற்றும் சித்தர்களுடைய பாடங்களும், கோவில்களிலே சொல்லப்படும் மந்திரங்களும், பெரியோர்கள் சொல்லிக் கொடுத்த நன்னடத்தை வழிகளும் இவைகள்தான் அவனுக்கு ஆன்மீகமாக முதலில் வந்து இருக்கிறது. 


                      அதிலிருந்து சிறிது, சிறிதாக மேம்பட்டு, ஆன்மீகத்தில் உள்ளே நுழைந்தவுடன் அடுத்தது என்ன, அடுத்தது என்ன, ஆழமாக (சீரியஸாக) சிந்தித்துப் பார்க்கிறான். அப்படி பார்க்கின்ற போதுதான் அவனுக்கு அறியதக்கதாக ஏதோ ஒன்றிருக்கிறது என உணர்கிறான். (மாணவர்களைப் பார்த்து கூறுகிறார்) நாம் பதஞ்சலி யோகத்தை நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம். பதஞ்சலி யோகமும், மற்ற சாதாரணவற்றிக்கும் என்ன வித்தியாசம் என்றால், குறைந்தபட்சம் மனிதன் அவனைப் பற்றி தெரிந்து, புரிந்துக் கொள்வதற்கு பதஞ்சலி யோகம் பயன்படுகிறது. 

              ஏனென்றால் அது நாட்டிற்காக, சமுதாயத்திற்காக, வேறு ஒரு விஷயத்திற்காகவும் சொல்லப்படவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு ஆன்மாவும், தன்னை உயர்த்திக் கொள்வதும், அதற்கு வழிவகுப்பதுதான் பதஞ்சலி யோகம். 

இது ஒரு சுயநலமில்லையா? என்று நீங்கள் கேட்கலாம்


எது சுயநலமில்லை?
                          மனிதர்கள் தனித்தனியாகவே பிறக்கிறார்கள்தனித்தனியாகவே இறக்கிறார்கள். இடையிலே யார், யாரோடெல்லாம், வாழ்கிறான் என்று பார்த்தால்நண்பனோடு, மனைவியோடு, குழந்தை, குட்டியோடு, எல்லா உறவினர்களோடு, அண்டை-அயலர்களோடு, சமுதாயத்தோடு, இந்த உலகத்தோடு, இவ்வாறு சேர்ந்து, கலந்து பழகுகிறார் கள். ஆனாலும் அவர்களை முன்னேற்றம் செய்துக் கொள்ள, அவர்களுக்குத் தெரியவில்லை. ஆக தன்னுடைய முன்னேற்றம் உண்மையில் எதுவென்று தெரியவில்லை.


                  அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு உலகத்தின் வழியிலே நடந்து கடைசியில் நமக்கு ஒன்றும் பலன் தராது என்று உணர்நத நிலையில், அப்போது தான் பதஞ்சலியின் யோக சூத்திரம் அவனைத் தட்டியெழுப்பி, இதுமட்டுமே பயன்தர வல்லது.  நம்முடைய நோக்கம், மனிதர்களுடைய நோக்கம் பிறப்பில்லாமல் இருப்பதற்கு என்ன வழி என்று சொல்லிக் கொடுக்கிறார். மனித வாழ்க்கை பருவப் பயணங்களில் எத்தனை வயதுக்கு முன்பாக இந்த பதஞ்சலி யோகத்தை பார்க்கிறானோ, அந்தந்த வயதைக் கடக்கும்போதெல்லாம் பலன் கிடைக்கிறது. திருமணத்திற்கு முன்னால் படித்தால் மனதை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டுமென்று தெரிகிறது.



                           திருமணமான பிறகு படித்தால், குடும்பம் என்றால் என்ன, ஆசை என்றால் என்ன? விருப்பு என்றால் என்ன? வெறுப்பு  என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன? எவ்வளவுக்கு எவ்வளவு வயதுக்கு முன்னரே படிக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவனுடைய வாழ்கைச் சிறப்பாக அமையும். ஆனாலும் எல்லோராலும் இயல்வதில்லை. ஏனென்றால் ஞானத்தேடலுக்கு, காரணம் வரும், அதற்கு ஒரு காலம் வரும், அதற்கு வயது வரவில்லை, என்றெல்லாம் பயமுறுத்தி வைத்திருந்தார்கள் நம்முடைய பெற்றோர்கள். எல்லா பெற்றோர்களையும்  சொல்லவில்லை.

                        
        ஏனென்றால் ஒவ்வொரு பெற்றோர்களும், தன்னுடைய உண்மை நிலையை யோசிக்காமல், அது எவ்வாறோ போகட்டும், என்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும், நலமோடு வாழ வேண்டும், செல்வத்தோடு வாழ வேண்டும், நான் நினைத்ததையெல்லாம் நடத்துவதற்கு அவனுக்கு சக்தி வேண்டும் என்றெல்லாம் பொதுநலத்தின் அடிப்படையின்றி சுயநலத்தின் அடிப்படையிலே அவற்றையெல்லாம் அடைய  அவனுக்குக் கொஞ்சம்  கோவிலையும் அங்குள்ள இறையையும் அறிமுகப்படுத்துகிறார்கள். ஆசை வார்தைகளைச் சொல்லி அறிமுகப்படுத்துவார்கள். அதற்கு மாறாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசவேண்டாம். ஆகவே இவ்வாறு ஆன்மீக துவக்கம் சிறிது, சிறிதாக வந்து இறைவனைப் பற்றி உணர்கிற காலம் வரும் போது சொல்லிக் கொடுப்பவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். ஆக அந்தமாதிரி குடும்பத்திலே சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமானால், அது கூட்டுக் குடும்பமாக இருந்தால் சொல்லிக் கொடுப்பவர்கள் இருந்துக் கொண்டே இருப்பார்கள். ஆகவே அதுபோன்ற சூழ்நிலை இப்போதில்லை. 


                வேறொருவர் உனக்கு சொல்லிக் கொடுத்தால், அது அவருடைய நன்மைக்காக இருக்கும். அது உன்னுடைய முன்னேற்றத்திற்காக இருக்காது. ஆக எப்படி இருந்தாலும் நம்முடைய நலம் பற்றியது நம்முடையது மட்டுமே. ஆன்மாவைப் பற்றியது. மற்றவை வெறும் கடமைகளே. கடனே என்று செய்யாமல், கடமையாகச் செய். கடமை உயிர்மூச்சு என்பார்கள். கடமை என்று சொன்னால், யாருக்கு கடமை செய்யக் கடமைப்பட்டிருக்கிறாமோ, அதைச் சரியாக செய்தாலே போதும்.

         ஆனால் ஆழ்ந்த பற்று, ஆழ்ந்த மோகம், ஆழ்ந்த பாசம், இதையெல்லாம் வைத்துக் கொண்டிருந்தால், நீ விரும்பும் தனிப்பட்ட முன்னேற்றத்தை உன்னால் காண முடியாது. ஏனென்றால் உன்னுடைய பாவ புண்ணியத்திற்காக பிறந்திருக்கிறாய், உன்னுடைய பாவ, புண்ணியத்தைக் கழிப்பதற்காக பிறந்திருக்கிறாய்.


           ஆகவே இந்த பாவ, புண்ணியத்தை இப்பிறவியிலே கழிக்காவிட்டால்எப்பிறவியிலே கழிப்பாய் என்று தெரியாது இதைப் பற்றி ஆன்மீகத்திலே வந்த பிறகு தெரிந்து கொள்ளும் விஷயம். இதில் தீவிரமாக உழைத்து செயலாற்ற வேண்டும், ஒவ்வொரு வினாடியும் பொன் போன்றது. ஆகவே அதை நினைத்து, நினைத்து எல்லோருக்கும் அவரவர் செய்கின்ற பணியிலே ஒவ்வொரு வினாடியையும் வீணாக்காமல், நற்சிந்தைகளிலேயே ஊறிப்போய் அவ்வழி வந்து விட, வந்து விட, பிறரோடு கலந்து பேசுவது என்பதே இல்லாமல் போய்விடும். அதாவது சௌஜன்னியம் என்பார்கள். (COSMOPOLITAN) இந்த மாதிரி பிறருடன் பழகுவது குறைந்து போய்த்தனியாக ஆகிவிடுகிறார்கள். மற்றவர்கள் நினைக்கலாம், அவருக்கு மூளை சரியில்லை என்று நினைத்தால் நினைத்துப் போகட்டும். மூளை சரியில்லையென்று சொல்கின்றவனோ, பாசம் வைத்திருப்பவனோ நம்மை ஒருபோதும் முன்னேற்றம் அடையச் செய்ய முடியாது. கடைசி நேரத்தில் கூட இறைவனை சொல்லிக் கொண்டிருக்கும்போது மனைவி முன்னே வந்து சாவி எங்கே வைத்திருக்கிறாய், தாய், நான் வந்திருக்கிறேன் பார். உனக்கு அப்புறம் யார் என்னைப் பார்ப்பது. இப்படியே மீண்டும் இவனை இறுதி மூச்சுவரை பந்தப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். 


                 ஆகவே எவ்வாறு கடைத்தேறுவது. கடைத்தேறுவது என்றால் இதுவெல்லாம் சொல்வது தவறு என்று சொல்லவில்லை. அவர்களுக்கு அந்தளவே ஞானமிருக்கிறது.

             பதஞ்சலி யோகத்தை நீ படிக்கப் படிக்க, அவர்களுக்குச்சொல்லிக் கொடு, இதுவெல்லாம், வேண்டாம். கிடைக்கிறது போதும், இதை வைத்துக் கொண்டு, அமைதியாக இருப்போம். நமக்கு என்ன குறை, உணவு கொடுத்திருக்கிறார், உடை கொடுத்திருக்கிறார், உறைவிடம் கொடுத்திருக்கிறார், வேறு என்ன தேவை? அதிகமாக ஆசைப்பட வேண்டாம் தாயே! என்ன வேண்டுமோ செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். அப்படி கடமைகளை நிறைவேற்றி அவன் தன்னுடைய கடமை எதுவோ, தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்ள வேண்டியது ஏதுவோ? அதை நிறைவேற்றிக் கொள்கிறான். அதுதான் சரியான சந்தர்ப்பம், அப்போதுதான் பதஞ்சலி யோகத்தை படிக்க வேண்டும், சொல்லி கொடுக்க வேண்டும், இந்த உணர்வு பதஞ்சலி யோகத்தைப் பற்றிப் பரவலாக வர வேண்டும். 

               அது வராததால் வெறும் ஆன்மீக நூல்களை, அல்லது ஆன்மீக சம்பந்தப்பட்ட நம்பிக்கைகளையும் படித்து இன்ன கோவிலுக்கு போனால், இன்னது நடக்கும், என்று அவன் ஒவ்வொரு கோவிலிலும் என்ன தேவையோ, அதனை அடைய அந்தக் கோவிலை நோக்கிச் செல்கிறான். அது மதங்களின் கட்டாயமா? அல்லது கடவுளோடு ஏதேனும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் கட்டாயமா?


                  மதம் எவ்வாறு இருந்தாலும். எவருடைய மத அடிப்படை எவ்வாறாக இருந்தாலும்; சரி, ஆன்மீக உணர்வு என்பது பற்றி மிக அடிப்படையாக இருக்கிறது. நம்முடைய மதத்திலயே ஆழமாகப் பார்த்தால், ஒவ்வொன்றும் ஆன்ம முன்னேற்றம் மற்றும் ஆன்ம விசேஷத்தை பற்றியதாகவே யிருக்கும். அதை யாரும் அந்த இடத்தை அறிந்து படிப்பதேயில்லை. 

                        எனக்குச் செல்வம் வருவது எப்படி, வீடு கட்டுவது எப்படி? வீட்டில் கல்யாணம் ஆகவில்லை என்றால் எந்தக் கோவிலுக்குச் செல்வது, குழந்தைப்பேறு எப்போது? மகிழ்ச்சியைத் தருவது வேறு எதாவதிருக்கிறதா, இதற்கு என்ன பரிகாரம் இருக்கிறது என்றுதான் நினைக்கிறார்களே தவிர, எது உண்மையான பக்தி, அந்த பக்தியை எவ்வாறு குரு மூலம் மற்றும் பிற துணைகள் மூலம் அடைவது என்பது பற்றி தெரியாதுதான் இதற்குக் காரணம். ஆகையால் அவர்கள் மீது தவறில்லை. தெரிந்தால் அப்படிச் செய்ய மாட்டார்கள்.

                  நம்முடைய மதத்தலைவர்கள் இறங்கி வந்து அவர்களுக்குப் புரியும்படி சொல்லி, உண்மையான பக்தி, கர்ம மற்றும் யோக விஷயத்தைக்கூறி அவர்களை முன்னேற்றம் அடையச் செய்தால், அவர்கள் கண்டிப்பாகப் பதஞ்சலி யோகத்தைக் கெட்டியாகப் பிடித்து முன்னேற்றம் அடைந்துவிடுவார்கள். வாழ்வில் அமைதி, திருப்தி, மகிழ்ச்சி அடைவார்கள்.


                   அதுவரைக்கும் பலர் அரைகுறையாக யோகத்தைக் கற்றுக்கொண்டும், சில பாடங்களை படித்துக்கொண்டும், அதில் அவர்கள் சரியாகப் படிக்கிறார்களா. அல்லது முன்னேற்றம் அடைந்துவிட்டார்களா, என்று கேட்டால் அதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. 

           ஆகவே வாழ்க்கையில் ஒரு விஷயத்திலும் முழுமையில்லாமல், உன்னைப் பற்றி உனக்கே தெரியாமல், பிறர்க்கு நீ எப்படி உதவ முடியும். பிறரிடமிருந்து நீ பெற்றாலும் அது உண்மையிலே நன்மையைத் தந்ததா? இவ்வாறு ஒரு திருமணமானவன் நன்றாக யோசித்தால் நான் இத்தனைக் காலம் மகிழ்ச்சி யடைந்திருக்கிறேனா என்று சிந்தித்துப் பார்த்தால், தெரியும் எல்லாம் சில மணி நேரங்களே. அவனுக்கு எதுவும் நினைவுக்கு வராது. 

              ஏனென்றால். ருசியான உணவு என்றால் குறிப்பட்ட வயதோடு சரி, இன்னும் அது மேல் ஆசை வந்தால், அந்த ருசியான உணவே இவனுக்கு வினையாக விடும். வேறு அனுபவங்கள் வேண்டுமென்றால், அவனுடைய உடல் ஒத்துழைக்காது. ஆகவே எல்லாவற்றிலும் இருந்து தனித்தனியாக பிரிக்கப்படுகிற போதுதான் நான் எந்த இன்பத்தையும் அடையவில்லை என்று நினைப்பான்.



சபை தொடரும்................

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment