இன்பம் என்பது என்ன?
மன அமைதி. அதுதான் பேரமைதி. அதாவது எந்தக் கவலையும் இல்லாமல்
இருப்பது. (piece
of mind) அது யாருக்கு இருக்கிறதோ அவர்கள்
தான் பாக்கியவான்கள். ஆகவே அந்த பாக்கியம் எவ்வாறு கிடைக்கிறது விதியின் மூலமும்
கிடைக்கிறது.
(ஏற்கனவே செய்த பூர்வ புண்ணியத்தின் படியும்) கிடைக்கும்.
நல்லோர் மத்தியிலும் கிடைக்கும். சத் சங்கங்களிலும் கிடைக்கும்.
ஆனால் அதை மேலும் விருத்தி செய்வது என்பதையும் எந்தக் கடையில் கிடைக்கும் என்று
தேட வேண்டுமா? (சிரிப்பு)
அந்தப் பதஞ்சலி யோகத்தை எவன் ஓருவன் சிரத்தையோடு
படிக்கிறானோ அவனுக்குத்தேடாமல் அமைதி கிடைக்கும். மனம் என்பது யாருக்கும்
இல்லாததல்ல. மனிதனைத் தவிர எல்லா விலங்குகளுக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் மனம்
இருக்கிறது. ஆனால் அவைகளுக் கெல்லாம் வரையறுக்கப்பட்ட நிலையிலே மனம் இருக்கிறது.
ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நம்மை
விட அவைகள் மிகச்சிறந்தவைகள். அவைகளுக்கு உணர்வில் என்ன ஊட்டப்ட்டிருக்கிறதோ,
புத்தியில் என்ன பதியப் பட்டிருக்கிறதோ, (Registered) அதைத்
தவிர வேறுறொன்றுக் கும் அதனுடைய மனம் செல்லாது. அவற்றினுள்ளும் ஆன்மா உறங்குகிறது.
ஆனால் நமக்கு எந்த (Registered)
பதிவும்
செய்யப்படவில்லை. இவனுள் விழித்திருக்கும் ஆன்மா சுதந்திரமற்று இருக்கிறது.
அதனால்தான் நம்முடைய மனம் பலவாறாகச் செல்கிறது.
ஆகவே வரையறுக்கப்படாத ஒன்று நல்ல
முறையில் இருக்கின்றது என்று சொன்னால், வரைமுறையோடு
வரையற்ற நிலையிலே, எல்லாச் சுதந்திரமும்
கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையிலே, இவன் தான் உயர்ந்தவன்
என்று சொல்கின்ற நிலையிலே, இறைவனுக்கு சமமானவன் என்ற
நிலையிலே, ஆன்மா
என்ற ஒன்று சாட்சியாய் நின்று சூட்சம வடிவில் இவனுக்கு இறைவனாக இருக்கிறது.
இவன் நினைத்தால் எல்லா நிலைகளிலும்
எல்லாவற்றையும் உயர்த்த முடியும். இவனே ரிஷியாகிறான், இவனே
தேவனாகிறான், இவனே கடவுளாகிறான். அந்தளவு உயர்ந்த
நிலையிருக்கின்ற மனிதன் தன்னைப் பற்றி உணரவில்லையென்று சொன்னால், இவையெல்லாம் எவ்வாறு சாத்தியமாகும். ஆகவே மனம் என்ற ஒன்று தான்
எல்லாவற்றிற்கும் அடிப்படை. அதனை மனிதன் தன் கட்டுப்பாட்டினுள் கொணராத வரை இவனுடைய
விசேஷத்தன்மைகள் யாவும் பயனற்றவையே. வானில் விதைத்த விதைகளே. ஒருபோதும் அவை
முளைக்காது.
அந்த மனம் என்ற ஒன்று திருப்தியடைய
வேண்டுமானால், அவனுடைய மனத்தை இவனுடைய
கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மனதைக் கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன
அணுகுமுறைகள் இருக்கின்றன, முதலில் உன்னுள் எப்போதும் நீ
தனியாக இருக்க வேண்டும்.
தனிமை என்பது ஊரை விட்டு ஒடுவதோ, காஷாயம் (காவி )
உடுத்திக் கொள்வதோ, எல்லாவற்றையும் வெறுத்துக் கொள்வதோ,
அல்ல. தனிமையென்று சொன்னால் உன்னை மற்ற விஷயங்களிலிருந்து பிரித்து
விடுவது. அவை எல்லாம் நிலையானவையல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எது நிலையான
இன்பம் தருவது என்ற நினைவு வந்தவுடனேயே
இவன் பிறவற்றில் இருந்து
தனிமைப்படுத்தப்பட்டு விடுகிறான். ஆகையால் இவன் துணையில்லாமல் இருக்கிறான் என்று
அர்த்தமில்லை. அப்போது தான் உண்மையான துணை வருகிறது. இறைவனின் துணை கிடைக்கிறது.
எப்போதெல்லாம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறாயோ, அப்போது தான்
உனக்கு வேதனைகளும், துக்கங்களும் உன்னிலிருந்து விலகி விடும். எப்போது உண்மையிலே
எல்லாவற்றிலிருந்தும், நீ உன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறாயோ,
அப்போது தான் ஞானம் என்ற ஒன்று கிட்டுகிறது. அப்போது நிறைந்த
வாழ்க்கை கிடைகிறது. அந்த வாழ்க்கையை அடைய அதற்கென்ற ஒரு தவிப்பு உன்னுள் வர
வேண்டும். நீ பதஞ்சலி யோகத்தைக் கற்க வேண்டும்.
பதஞ்சலி யோகம் அப்படி என்ன
சொல்கிறது என்றால், மனதைப்பற்றி அல்லாது
வேறு எதுவும் சொல்லவில்லை. நீ மனத்தை ஆள வேண்டும். அப்படிச் செய்தால், நீ நிம்மதியாக இருப்பாய். மனதைத் தெரிந்துகொண்டு விட்டால், பிரபஞ்சத்திலுள்ள அத்தனை ரகசியங்களையும் தெரிந்து கொண்டால் உன் முழு வாழ்நாளும் உனக்குத் தெரியும்,
ஏற்கனவே கழித்த வாழ்க்கை தெரியும், இனி கழிக்க
இருக்கின்ற வாழ்க்கை தெரியும். இனியும் மீதக் காலம் எவ்வாறு கழியும் என்பதும்
தெரியும். ஆகவே மனதைச் செம்மைப்படுத்துவதுதான் பதஞ்சலியின் முக்கியமான வேலை.
ஸ்ரீ
பதஞ்சலி மகரிஷி அவர்கள் நம்முடைய மனதை நாம் ஆள்வதற்கு நம்மை மிக மெதுவாகக் கொண்டு
செல்கிறார்.
முதலில் நீ தர்மத்தைக் கடைப்பிடிக்க
வேண்டும். தர்மத்தின் படி ஒழுக வேண்டும், இயமம்,
நியமம், இந்த இரண்டும் வந்துவிட்டால், மற்றவையெல்லாம் படிப்படியாக வந்துவிடும். இந்த
இரண்டிலும் சீர்பட்டு விட்டால், உலகாதய மான விஷயங்கள்
சரியாகி விடும். அதிலே நேர்த்தியான வாழ்க்கை வாழ்ந்து விடுவாய். முதலில் மன
நிம்மதி கிடைக்கும். யாருக்கு என்ன கொடுக்க வேண்டும். யார் நமக்கு என்ன தருவார்கள்
என்ற எண்ணங்களெல்லாம், போய்விடும்.
அப்படியானால், நான் ஒட்டாண்டியாகி விடுவேனா அப்படில்லை, உன்
தேவைக்கு ஏற்ப, உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்கும்.
அதிலிருந்து கிடைக்கின்ற வருமானம் போதுமானதாக இல்லாவிட்டாலும், அதைப் போதுமானதாக மாற்றிக் கொள்ள முடியும். அப்போது உண்மையான நிம்மதி
கிடைக்கிறது. நீங்கள் நினைக்கலாம், நான் சாமியாராக
அத்தனையும் சொல்கிறீர்கள் என்று.
சாமி 'யார்' என்று தெரிந்துக் கொள்வதில் தான் இதில் முக்கியமாக இருக்கிறது.
சிறிது
காலத்திற்கு பிறகு நீங்களே சாமியாராக மாறப் போகிறீர்கள். அதாவது சுவாமியாக மாறப்
போகிறீர்கள்.
அதற்குத்தான் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மனம் கட்டுப்படுவது
மூலம், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம்,
தாரணை, தியானம், சமாதி
என்ற எட்டு அங்கங்களின் வழியாக மிக அழகாக நம்மை சற்குரு ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி
நகர்த்திச்செல்கிறார்.
No comments:
Post a Comment