ஓம் ஸ்ரீ கிருஷ்ண தேவாய பதயே நம
சமாதி நிலையில் இருந்து எதையுமே காண இயலாது. ஆனந்தத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்க முடியும். அந்த நிலையை விட்டு வந்த பின்பு அந்த ஆனந்தமும் நமக்கு இருக்காது .
சமாதி நிலை அனுபவம் என்பதும் என்பது சிலருக்கு ஓரிரு வினாடிகளிலேயே சித்தியாகி விடும். சிலருக்கு ஓரிரு வருடங்கள் ஆகலாம். சிலருக்கு ஓரிரு பிறவிகள் கூட ஆகும். சமாதியை பற்றியே நினைத்துக் கொண்டிராமல் மனதை முதலில் சுத்தப்படுத்தினால் சமாதி தானாகவே கைக் கூடும்.தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டாலே போதும். எல்லாம் எளிதில் நிறைவேறும்.
அடுத்தபடியாக முன்னேற்றத்தில் ஏற்படும் சறுக்கல்கள்.
நாம் ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் முன்னேறி விட்டோம் என்று நினைப்போம். ஆனால் திடீரென்று ஏற்படும் சறுக்களினால் ஆரம்ப நிலைக்கே வந்துவிடுவோம்.
ஞானத்தில் ஏற்படும் இதுபோன்ற சறுக்கல்கள் ஒருபோதும் வரக்கூடாது என்று ஒரு சிலர் நினைப்பார்கள். அவர்கள் எப்போதும் பயபக்தியோடு அந்த நல்ல சிந்தனையுடன் செயல்பட்டுக்கொண்டு இருப்பார்கள். அதைப்போல் அகந்தை இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு இதுபோன்ற சறுக்கல்கள் எதுவும் ஏற்படாது.
கோபத்திற்கும் அகந்தைக்கும் சற்று வேறுபாடு இருக்கின்றது. நியாயமான காரணத்திற்காக வரும் கோபத்தில் தவறொன்றுமில்லை. உதாரணமாக ஒரு அரசனுக்கு கோபம் என்பது வரவேண்டும். ஆனாலும் அவன் அதை அடக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். கோபம் என்பதே வரவில்லை என்றால் அவன் அரசனாக இருக்க முடியாது. இது போன்ற முன்னேற்றத்தில் ஏற்படும் சறுக்கலிலிருந்து நாம் மீளவேண்டும்.
தியானத்தினால் என்ன பலன் கிடைக்கின்றது எப்போது சமாதி நிலை கிட்டும். என்றெல்லாம் ஒருபோதும் யோசிக்கத் தேவையில்லை.
தியானம் செய்யும்போது ஒன்பது வகையான இடையூறுகள் அதாவது நோய் ,மனத்தளர்வு, சந்தேகம், கவனக்குறைவு, சோம்பல், விருப்பம், தவறாக புரிந்து கொள்ளல் ,சமாதிநிலை ,கைகூடாமை, முன்னேற்றத்தில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை எல்லாம் தீர்க்கும் வழிமுறைகள் இருக்கின்றன.
முதலில் நோய் என்பதை தீர்ப்பதற்கான வழிமுறைகளை காணலாம். சாதாரணமாக நோய் எண்பது பிராண ஓட்டம் சீராக நடைபெறத் தடைபடுவதால் ஏற்படுகின்றது. பிராண சக்தி எங்கு குறைகின்றதோ அங்கு நோய் உருவாகின்றது.
பிராணன் என்பது வேறு. பிராண சக்தி என்பது வேறு. பிராண சக்தி என்பது ஜீவ சக்தியாகும். அந்த ஜீவ சக்தி எந்த உறுப்பில் இல்லையோ அந்த உறுப்பு செயல்படாது. அதாவது வேலை செய்யாது. பிராணன் குறைவதால் மாரடைப்பு வருகின்றது.நம்முடைய உடலில் உள்ள எல்லா நாடி நரம்புகளிலும், எல்லா அவையவங்களிலும், அதாவது உறுப்புகளிலும் ஒவ்வொரு துவக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் உறுதியாக இருக்க வேண்டும்.
உதாரணமாக சிறுநீர்ப்பையில் பிராணன் இல்லை என்றால் சிறுநீரகக் கற்கள் வந்து விடுகின்றன. ஏனென்றால் கற்களைச் சுத்திகரிக்கும் தன்மை அந்த பிராணன் இடம் தான் இருக்கின்றது. அந்தக் கற்களை மருத்துவரின் உதவியுடன் அகற்றிவிட்டாலும் கூட மறுபடியும் கற்கள் வந்து விடுகின்றன. எனவே நாம் பிராண சக்தியை அதிகரித்தால் மட்டும் தான் இந்த பிரச்சனை தீரும்.
பிராணயோகத்தினால்
அந்தப்பிராணனை எல்லா இடங்களிலும் பரவச்செய்து விட்டால் எல்லா நன்மைகளையும்
பெறலாம்.பிராணன் ஆனது நாடிகளில் பயணம் செய்கிறது. 72,000 நாடி நரம்புகள் நம்முடைய உடம்பில் இருக்கின்றன.
நாடி நரம்புகளுக்கும் பல கிளைகள் இருக்கின்றன.அந்த கிளைகளில் எல்லாம் இந்தப் பிராணன் குறைவதால் நோய் வருகின்றது. ஆனால் யோகம் செய்யும் போது என்னென்ன நோய்கள் வருகின்றன என்பதை தான் நாம் பார்க்க போகிறோம்.
முதலாவதாக யோகம் செய்யும் போது மனக்குழப்பம் என்னும் நோய் வருகின்றது. ஒரு சில சிந்தனைகள் எழுகின்றன. அதில் நல்ல சிந்தனைகளும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். அதனால் ஒரு விதமான எதிர்பார்ப்பு நமக்குள் வந்து விடுகின்றது.
ஏற்கனவே நம்முடைய ஜீனில் இருந்து வந்த நோயின் காரணமாக நாம் யோகம் செய்வதில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நம்முடைய வினைப்பயன் காரணமாக அந்த நோய்கள் எல்லாம் நமக்கு வந்திருக்கின்றன. அவற்றை இருப்பு நோய் என்று சொல்வதுண்டு. அது எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
40 வயது வரை நன்றாக இருந்தவனுக்கு திடீரென்று சர்க்கரை நோயோ,மாரடைப்போ வந்து விடுகின்றது. புற உடல் இயக்கம்,அக உடல் இயக்கம் என்பதைப்பொறுத்து புறநோய் ,அகநோய் என இரண்டு விதமான நோய்கள் இருக்கின்றன.
புற உறுப்புகளான கை, கால்கள்,கண்,மூக்கு என புற உறுப்புகளில் வரும் நோய் புற நோய். யோகம் செய்வதால் நோய்கள் எதுவும் நமக்கு வராது. கை கால்களை தூக்கி வளைத்துப் பயிற்சி செய்வதால் சிறிது நேரம் கை,கால்கள் வலிக்குமே தவிர எவ்வித நோயும் வந்துவிடாது. அந்த வலி சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும்.
அக உறுப்புகளான நுரையீரல், இதயம், கல்லீரல்,ஜீரண உறுப்புகள், குடல்கள் இவற்றில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
யோகம் (தியானம் ) செய்கின்ற போது சிலருக்கு சூடு அதிகமாகும் .சிலருக்கு குளிர்ச்சி வரும். இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது .
சாதாரண நிலையில் நாம் செய்யும் ஒரு சில செயல்கள் யோகம் (தியானம்) செய்யும்போது நிறுத்தி விடுவதால் உடலின் இயக்கம் இயல்பான நிலையிலிருந்து சற்று மாறுபடுகின்றது. உடலின் வியர்வை அதிகமாக சுரக்கிறது.
மயக்கம் வருவது போல் தோன்றுகிறது.
உடல் சூடாகிறது.
உடல் எடை குறைகிறது.
இவையெல்லாம் நோய்கள் அல்ல.
இயல்பாக நாம் செய்யும் தவறான செயல்களுக்கு மாற்றாக இப்போது பிராணயாமம் போன்ற பயிற்சிகளை செய்யும் போது ஆரம்பத்தில் நம்முடைய உடலானது அதை ஏற்க மறுக்கின்றது.
அதனால் ஒரு சில எதிர்ப்புகளை உடல் காட்டுகின்றது. சிறிது காலம் எதிர்ப்புகளை காட்டுமே தவிர பின்னர் எதிர்ப்பதில்லை. அந்த நிலைக்கு பழகிவிடும். சாதாரணமாக சூழல் காரணமாக அவ்வாறு ஏற்படலாம்.
உதாரணமாக வீட்டில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறோம். சமையலறை அருகில் அமர்ந்தால் அதிலிருந்து வரும் வெப்பத்தினால் உடல் சூடு அதிகமாகும். சில அறைகளில் காற்று வராது .சில அறைகளில் அளவுக்கு அதிகமாக காற்று வரும். வீட்டின் அருகே சாக்கடை ஓடிக் கொண்டிருக்கலாம்.
ஆகவே இது போன்ற இயற்கை உபாதை காரணமாக உடல் தியானத்தின் போது நம்முடைய உடலில் ஒருசில பிரச்சனைகள் வரலாம். ஆனாலும் அவைகளை தியானம் சரி செய்யும். இந்த இன்னல்கள் அனைத்தையும் தாக்குப் பிடிக்கும் வண்ணம் நமது பயிற்சிகளைப் பக்குவப் படுத்திக் கொண்டால் இந்தப் பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட்டு விடலாம்.
யோகம் செய்யும் போது கடினமான உணவுகளை எல்லாம் தவிர்த்துவிட்டு உணவுப்பழக்கத்தை சரி செய்து கொண்டால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் நமக்கு வராது.
ஆகவே இவற்றையெல்லாம் யோகத்தினால் (தியானத்தினால் ) வந்த நோய்கள் என்று சொல்லவே கூடாது. ஏனெனில் யோகத்தினால் எந்த நோயும் வருவதில்லை. ஒரு சிலருக்கு யோகம் செய்வதால் அபரிமிதமான பசி ஏற்படுகின்றது. ஒரு சிலருக்கு தியானத்தினால் பசியே இல்லாத நிலை ஏற்படுகின்றது .யோகம் செய்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது .அது சிறிது காலத்தில் சரியாகிவிடும். அபானனை உள்ளே நிறுத்துவதால் உடல் சூடு அதிகமாகி அதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அபாணன் அது வெளியே செல்ல வேண்டிய வாயு. அதை உள்ளே நிறுத்தியதால் குடல் சூடு அதிகரிக்கின்றது.
பிராணாயாமம் மூலமும், உணவுப் பழக்கவழக்கத்தின் மூலமும் உடலில் ஏற்படும் சூடு அல்லது குளிர்ச்சியை சரி செய்து கொள்ளலாம்.
காலையில் எழுந்த உடன் வெறும் தண்ணீரைக் குடிப்பதற்கு பதிலாக, சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த ஆயுர்வேதம் கஷாயத்தை சிறிதளவு அருந்தலாம் .அல்லது சீரகத் தண்ணீரை அருந்தலாம்.
சில நேரங்களில் தியானம் செய்வதால் உறக்கம் வராமல் போகலாம்.
அதற்கு விளக்கெண்ணையை தலை உச்சியிலும் தொப்புளிலும் தடவவேண்டும்.
சைனஸ் பிரச்சினைக்கு கபாலபதி செய்தால் சரியாகிவிடும்.
தலைவலி ஏற்பட்டால் இரு கால்களின் கட்டை விரல்களையும் பிசைந்து விட்டால் சரியாகிவிடும்.
மலச்சிக்கல் வந்தால் மயூராசனம் செய்தால் சரியாகிவிடும். நரம்புத் தளர்ச்சிக்கு நீராகாரம் ஒரு சிறந்த மருந்தாகும்.
இதுபோன்ற வழிமுறைகளின் மூலம் தியானப் பயிற்சிகளுக்கு இடையூறாக வரும் நோய்களிலிருந்து நாம் விடுபடலாம்
(குறிப்பு : யோகம் என்ற இடங்களில் அது தியானம் என்பதை குறிப்பிடுகிறது என்பதை நினைவில் கொள்ளவும் )
ஆசிகளுடன்......
யோக ஆச்சார்யா
டி.எஸ்.கிருஷ்ணன்
(தொடரும் ) ...........
No comments:
Post a Comment