Wednesday, August 12, 2020

யோகப் பயிற்சியில் (தியானத்தில் ) ஏற்படும் தடைகள்

     பகுதி 2

  யோகப் பயிற்சியில் (தியானத்தில் ) ஏற்படும் தடைகள் 

மனத் தளர்ச்சி என்பது தியானத்திற்கு ஒரு தடையாக இருக்கின்றது. சிலருக்கு யோகம் செய்ய முடியவில்லையே என்று நினைத்து கூட மனத் தளர்ச்சி  ஏற்படுகின்றது.

 


அதிக தூக்கம்

அதிகப்படியான பணி, வீட்டில் உள்ள பிரச்சினைகள், இவற்றில் எல்லாம் நாம் யோகம் செய்வதற்கான இடையூறு ஆக கருதுகின்றோம். ஆனால்,நமக்கு எத்தனை அதிகமாக பணிகள் இருந்தாலும் இரவில் தூங்காமல் எழுந்திருந்து யோகம் செய்யலாம் .ஆனால் நாமோ இரவில் தூங்காமல் இருந்தால் உடலுக்கு ஓய்வு கிடைக்காது.

 

மறுநாள் உடல் சுறுசுறுப்பாக இருக்காது என்று எண்ணுகிறோம். 

 

  ஆனால், தியானத்தின் போது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஓய்வு கிடைக்கின்றது. தியானம் என்பதே தூங்காமல் தூங்குவது தான். 

  எனவே பகலில் எத்தனை பணிகள் இருந்தாலும் இரவில் தூங்காமல் தியானம் செய்யலாம். 

  அதேபோல் பணியின் நிமித்தம் வெளியூர்களுக்கு பயணிக்க நேர்ந்தாலும் பயணத்தின்போதும் தியானம் செய்யலாம்.

  சாந்தியாசனம் அல்லது சவாசனத்தை ஒரு மணி நேரம் செய்தாலே போதும் .ஆறு மணி நேரம் ஆழ்ந்து தூங்கியதற்குரிய பலன் கிடைத்து விடுகின்றது. இவ்வாறாக சாந்தியாசனத்தை நன்றாகப் பழகி செய்து வந்தால் போதும்.

     ஒரு சிலர் 24 மணி நேரத்தில் குறைந்தது பத்து மணி நேரத்தை தூங்கியே கழித்துவிடுகிறார்கள். தூங்குவதற்காக மட்டும் நாமொன்றும் பிறப்பு எடுக்கவில்லை. என்பதை நாம் முதலில் உணர வேண்டும். ஞான வழிக்கு வந்த பிறகு நமக்கு ஊன் உறக்கம் இவையெல்லாம் முக்கியமில்லை. 

  நான் தூங்க மாட்டேன் என்று சபதம் செய்து கொண்டால் தூக்கம் நம்மிடம் வராது. இதன் பொருள் நான் தூங்காமல் இருக்க வேண்டும் என்பதல்ல. உறக்கத்தை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.

 

 மனத்தளர்ச்சி.


          தூக்கத்தை ஒரு தடையாகக் கருதி தியானப் பயிற்சிகளை ஒரு போதும் நிறுத்திவிடக்கூடாது. அடுத்ததாக மனத்தளர்ச்சி. பொதுவாக மனமானது வேண்டியது வேண்டியபடி கிடைக்காதபோது தளர்ந்து விடுகிறது. சிலர் கூறுவார்கள்.

 தியானத்தின் போது மனம் தளர்ந்து விடுகிறது என்று. ஆனால்,தியானத்தின் காரணமாக மனத்தளர்ச்சி  வருவதில்லை. நாம் நம்முடைய பணிகளை உரிய வேளையில் முடிக்காததால் தான் மனத்தளர்ச்சி வருகின்றது. அடுத்ததாக சந்தேகம்.

 

 சந்தேகம் 


சந்தேகம் என்பது எந்த விஷயத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளாததால் வருகின்றது. நாம் தியானம் செய்யும்போது எந்த நிலையில் இருக்கின்றோம் என்ற சந்தேகம் வருகின்றது.

 உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் தியானத்தினால் தான் இது வந்ததோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. ஞானவழியில் நமக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் அதனை குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

 

கவனக்குறைவு 

அடுத்தபடியாக கவனக்குறைவு. நாம் எந்த ஒரு செயலையும் முழுமையான கவனத்துடன் செய்வதில்லை.ஆனால் ஞான வழிக்கு வந்தபிறகு கவனக் குறைவு என்பதே இருக்கக்கூடாது. கவனம் மிக அதிகமாக இருக்க வேண்டும்.

 

சோம்பல்

        அடுத்தபடியாக சோம்பல். இந்த சோம்பலானது நாம் செய்ய நினைக்கும் எல்லா காரியங்களையும் கெடுத்து விடுகின்றது. எனக்கு வயதாகிவிட்டது என்று நினைப்பது ,கை வலிக்கிறது, கால் வலிக்கின்றது, வெயில் அதிகமாக இருக்கின்றது என்று சில காரியங்களைச் செய்யாமல் இருப்பது. வயோதிகத்தினால் வரக்கூடிய இயலாமையே ஆகும். 

   ஆனால், சில சில நேரங்களில் எல்லாமே சரியாக இருந்தாலும் கூட இது தினமும் செய்யக்கூடிய செயல் தானே .இன்று ஒருநாள் செய்யவில்லை என்றால் என்ன என்று நினைத்து அந்தச் செயலை செய்யாமல் இருப்பதே சோம்பலாகும்.

 

புலன் நுகர்ச்சி.

   அடுத்தபடியாக புலன் நுகர்ச்சி. புலன் நுகர்ச்சி என்பது ஒருவகையான விருப்பம். புலனானது நம்மை விரும்ப செய்கின்றது. இந்த புலனானது எதையெல்லாம் பார்க்கிறதோ, கேட்கின்றதோ,சுவைக்கிறதோ,நுகர்கின்றதோ அதையெல்லாம் விரும்பச் செய்கின்றது. இந்தப் புலன் நுகர்ச்சி என்ற விருப்பத்தில் இருந்து விடுபடுவதற்காக தான் நாம் யோகம் செய்கிறோம். ஆனால், அதுவே நம்மை யோகம் செய்யத்தடுக்கின்றது. ஆகவே, அதிலிருந்து விடுபட என்ன வழி என்பதை பார்க்கலாம். (#tsk)

 

 தவறான புரிதல் 

அடுத்தபடியாக தவறாக புரிந்துகொள்ளுதல்.

         இது நமக்கு ஒரு சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக இருக்கிறது. நாம் தியானம் செய்யும் போது ஒரு சில விஷயங்களை நாம் தவறாகப் புரிந்து கொள்கின்றோம். நம்முடைய மனம்தான் அதற்குக் காரணம். மனதில் எழும் கற்பனைகளால் நாம் சில விஷயங்களை தவறாக புரிந்து கொள்கின்றோம். தியானத்தின் போது எந்தவிதக் கற்பனைகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கக்கூடாது. தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்தி அமைதி நிலைக்குக் கொண்டு வருவதே ஆகும். தியானத்தின் இறுதியில் சமாதிநிலை கூடவேண்டும். 

 

                                                                           (தொடரும் )

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment