ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு -2
11 ) நட்புள்ளம் கொண்ட கதிரவனே ! இன்று உதயமாகி நீ உயர்ந்து வானில் எழுவது, எம் இதய நோய்களையும், மஞ்சள் காமாலை நோய்களையும் குணப்படுத்துவதற்காக இருக்கட்டும்.
12 ) எமது காமாலை மஞ்சள் கிளிகளாலும், ரோபணா பறவைகளாலும் கொத்திச் செல்லப் படட்டும். அந்த மஞ்சள் நிறம் எம்மை விட்டு விலகி ஹரித மரங்களைச் சென்று பற்றிக் கொள்ளட்டும்.
13 ) என் பகைவனை எதிர்ப்பதற்கு என்னிடம் சக்தி இல்லை. முழு ஆற்றலோடு எழும் இந்த சூரியன் என் பகையழிக்கட்டும்.
14 ) தேவர்களின் படைபோலக் கதிர்கள் எழுகின்றன. மித்திரன், வருணன், அக்நி ஆகியோரின் கண்களைப் போல் அவை ஒளிர்கின்றன. எல்லாத் தாவர ஜங்கம (அசையும், அசையா ) பொருளின் ஆத்மாவாக விளங்கும் சூரியன் தன் ஜோதியினால் புவியையும், வானையும் நிரப்புகின்றான்.
15 ) ஒளிர்பவளான தன் தேவி உஷாவைத் தொடர்ந்து , இளம்பெண்ணைத் தொடரும் யுவன் போல், சூரியன் எழுகின்றான். அப்போது மங்களம் வேண்டி , தம் மனைவியருடன், அறிஞர்கள் சூரியனைச் சிறப்பித்து வேள்விகள் நடத்துகின்றனர்.
16 ) சூரியனின் குதிரைகள் விரைந்து செல்பவை, மங்களகரமானவை, விசித்திரமான அங்க அமைப்பு கொண்டவை, தமது வழியினைத் தவறாது பற்றிச் செல்பவை. துதிகளால் இன்புறும் இயல்புள்ளவை, துதிகளைச் செவிமடுத்த வண்ணம் அவை கிரணங்களின் உச்சியிலேறி, வேகமாக ஜ்யோதிர்லோகத்தையும், புவியையும் சுற்றி வருகின்றன.
17 ) (மாலையிலே முடிக்கப் படாமல் இருக்கும் பணிகள் இருந்தாலும்) தான்
பரத்திய ஒளியை சூரியன் திரும்பவும் ஈர்த்துக் கொள்கின்றானே
பரத்திய ஒளியை சூரியன் திரும்பவும் ஈர்த்துக் கொள்கின்றானே
அதுவே அவனது மகிமை.
அவனது தெய்வத் தன்மை.
அவன் தன் குதிரைகளைத் தேரிலிருந்து அவிழ்த்து விடுவதைக் காணும் ராத்திரி தேவன், தன் ஆடையை அனைத்தின் மீதும் போர்த்தி இருள் கவ்வ வைக்கிறான்.
18 ) மித்ரனும், வருணனும் காணும் வகையாக, ஆதவன் வானில் ஜோதி வடிவம் காண்பிக்கிறான். ஒரு சமயத்தில் அவன் கதிர்கள் நிலையான, ஆற்றல் மிகுந்த ஒளியினைப் பரப்புகின்றன. மற்றொரு சமயத்தில் அக் கதிர்கள் விலகி இரவின் கருமையை விரிக்கின்றன.
19 ) தேவர்களே ! இன்று சூரியன் உதயமாகும் போது எங்களைக் கொடிய பாவத்திலிருந்து விடுவியுங்கள். மித்ரனும் , வருணனும், அதிதியும் , கடலும், புவியும், ஜ்யோதியும் எங்களது துதிகளை ஏற்றுக் கொண்டு சிறப்பிப்பார்களாக.
20 ) இந்திரன், மித்ரன், வருணன் , அக்நி போன்ற எல்லாம் சூரியனே என்கின்றனர் அறிஞர்கள். அவனே சுபர்ணன் (கருடன்) என்கின்றனர். அவன்தான் அக்நி, யமன், மாதரிஸ்வான் எனவும் சொல்கின்றனர்.
(தொடரும் )
courtesy - ரிக் வேத மந்திர கோஸம்
No comments:
Post a Comment