Tuesday, January 25, 2011

கண் பார்வை பிரகாசிக்க - யோக சிகிச்சை

 யோகாசனம் செய்வோம் -2  (சக்ராசனம் )

ஆன்மீக உறவுகளை மீண்டும் ஒரு பதிவில் சந்திப்பதில் மனம் மகிழ்கிறது.
நமக்குள் மட்டுமல்லாது இந்த பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களிலும் நிறைந்தவனும், அணுக இனியவனும், அளவிட முடியாதவனும் , தந்தையும், தாயுமாக  இருப்பவனுமாகிய அந்த இறைவன் , எப்போதும் அவன் நினைவை விட்டு நாம் அகலாதாவாறு நமக்கு நல்ல மனதை தரட்டும்.

ஸ்வார்த்தம் சத் சங்கம் என்று தோற்றுவிக்கப் பட்டதோ அன்று முதல் இன்று வரை
கடந்த 31 ஆண்டுகளாக ஆன்மீகத் தொண்டாற்றி வருகிறது. 
இந்த பணி தொய்வின்றி தொடர உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்ளட்டும். 

வெளிப்பார்வையில் படுவதே மெய் என  நாம் நினைக்குமளவுக்கு நம்மை அகப் பார்வை பார்க்க விடாதவாறு  நம் கர்ம வினை நம்மை பிணைத்துள்ளது. இருந்த போதிலும் நம்முடைய நல்ல செயல்கள், சிந்தனைகள் ,  இந்த வாழ்க்கையினை பற்றி ஆராயத் தூண்டுகின்றன.  

தர்மம் என்ற கோட்பாடை பின்பற்றி அந்த பாதையில் நடப்பதன் மூலம் நாம் உயர்வு பெறலாம்.  நம் முன்னோர்கள் , நாம் அவர்கள் வழி வந்தவர்கள் என்று பெருமிதம் கொள்ளும் உரிமையினைத் தந்த , வாழ்வியல் தர்மத்தை வகுத்து , அந்த தர்மமாகவே வாழ்ந்து நமக்கு வழிகாட்டிய அந்த ரிஷிகள், குரு மார்கள், மகான்கள், அருளாளர்கள் அந்த தர்மக் கோட்பாடை நமக்காக வகுத்தார்கள் .  

அகப்பார்வையின் மூலம் ஆன்ம உய்வு பெறலாம் என்ற தத்துவத்தை பின்பற்றி ரிஷிகளால் இயற்றப் பட்ட பல சாஸ்திரங்களிலே ஒப்பற்றதும்,
நடைமுறைக்கு ஏற்றதும்  நமக்கு ஆன்ம விடுதலையினை அளிக்க கூடியதுமான 
யோகக் கலை நம் குரு பதஞ்சலியினால் அளிக்கப் பட்ட ஒரு ஒப்பற்ற ஒரு கொடை 
அந்த யோகக் கலை இன்று பார் போற்றும் வண்ணம் பரந்து விரிந்த போதும், இங்கே அது தொய்வடைந்தது போன்ற தோற்றம் சிறிது உள்ளது. 

மேலை நாட்டவரும் போற்றி வியந்து தனதாக்கிக் கொள்ள துடிக்கும் யோகக் கலையின்  அவசியத்தை நம்மில் பெரும்பாலானோரும் உணரவேண்டும். 

உடலில் ஒரு ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட்டால் அது நம் மனதையும் பதிக்கிறது. அது போல் மனதின் சமச்சீர் தன்மை சீர்குலைவதினால்  அதனால் உடலும் பாதிப்படைகிறது. 
உடலும் மனமும் ஒரு சேர சரியில்லை என்றால் இந்த உடல் என்ற படகைக் கொண்டு இந்த வாழ்க்கை என்ற கடலைக் கடக்க முடியாத நிலை வந்து விடும். 
 அதற்காகத் தான் யோக சாஸ்திரம் உடலும் , மனமும் செம்மையாக  யுக்திகளை வகுத்துள்ளது.   

அந்த வகையிலே உடல் நலத்தை போற்றக் கூடிய ஆசனங்களை வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம். 

இப்போது சக்ராசனம் என்ற ஆசனத்தின்  செய்முறையினை காண்போம் 


யோகாசனம், சக்ராசனம், மதுரை, ஸ்வார்த்தம் சத்சங்கம்
thanks  to www .yoga centre .com
செய்முறை-

விரிப்பில் மல்லாந்து படுத்து கை, கால்களை தளர்த்தி படுத்த நிலையில் இரு பாதங்களை பதித்தவாறு முட்டிகளை மடக்கவும். கைகளை இரு காதருகே கொண்டு வரவும். 

பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி  தலை, முதுகு , இடுப்பு, தொடைகள் மெதுவாக தரையிலிருந்து அரை வட்ட வடிவமாக உயர்த்தி நிற்கவும். 

15 வினாடிகளுக்கு பின் மெதுவாக உடம்பை தரையில் கிடத்தியவாறு இரண்டு நிமிட ஒய்வு எடுத்துக் கொள்ளளவும் . 

இதே போல் இருமுறை இந்த ஆசனத்தை பயிலலாம்.  

பலன் 
உடம்பின் அனைத்து உறுப்புகளும், சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது. 

ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமாக கையாளவும். 

யோகக்கலையினை தகுந்த ஆசிரியரின் உதவியுடன் பயிற்சி மேற்கொள்பவர்கள்  மிகுந்த பலனைப் பெறுவார்கள். 

இதனைப் படிக்கும் ஆன்மீக உள்ளங்கள் இந்த கட்டுரையினை மற்றவர்கள் பார்வைக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம் . 




No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment