அன்புள்ளங்களுக்கு மீண்டும் ஒரு முறை வணக்கம்-
ஒரு பிரபலமான தினசரியில் நமது குருநாதர் T.S.கிருஷ்ணன் முன்பு ஆன்மீக
கட்டுரைகளை தொடர்ந்தும் , தற்போது சற்று இடைவெளிகளிலும் ஆன்மீக கட்டுரைகளை நாளிதழின்
வேண்டுகோளின் பேரில் எழுதி வருவது வழமையான ஒன்று.
அந்த சமயத்தில் பதஞ்சலி யோகம் பற்றிய அடிப்படையான கேள்வி – பதில் நிகழ்ச்சி
ஒன்று ஏற்பாடு செய்தால் சிறந்த ஆன்மீக அடித்தளமாக புதியவர்களும், ஏற்கனவே
அத்துறையில் இருப்பவர்களுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று நாளிதழ்
சார்பில் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஒரு
நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது .
அதனடிப்படையில் ஞான சபையின் மாணவர்கள் மற்றும் புதிய வருகையினர் கலந்த சத்சங்கம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நமது பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் நிகழ்த்தப்
பட்டது.
சீடர்களாகிய மாணவர்கள் மூலமாக கேட்கப்பட்ட யோகத்தின் பல்வேறு பரிமாணங்களை
பற்றிய கேள்விகளும் அதற்கு ஸ்ரீ குருநாதர் அளித்த பதில்களும் செவிக்கு
விருந்தாகவும், ஞானச் சிந்தனையை தூண்டும் விதமாகவும் அமைந்தது என்பதை அவற்றை இங்கே
பதிவிடுவதின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இங்கே அவற்றை வெளியிடுவதற்கு அனுமதி அளித்த சத்சங்க அன்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
இனி அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
ஸ்ரீ குருவின் உரை :
எல்லாம் வல்ல பழங்காநத்தம் அருள்மிகு
ஸ்ரீ காசி விசாலாக்ஷி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருவருளாலும் இவ்வாலயத்தில் அமர்ந்துள்ள
சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் குருவருளாலும் ,சத்குருவின் யோக பீடத்தின் முன்பாக நிகழ்வுறும் பதஞ்சலி யோக
சிற்றுரை நிகழ்வில் கலந்து கொண்டுள்ள
மெய்யன்பர்களுக்கும் மற்றும் இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த ஸ்வார்த்தம் சத்சங்க
மாணவர் குழு , அன்பர் குழு , இறை உணர்வு கொண்ட மக்கள் குழு அனைவர்க்கும் பதஞ்சலி
மஹரிஷி யோக கேந்திரத்தின் சார்பாக
அடியேனது ஆன்ம வணக்கங்களை வெளிப்படுத்தி வயதிற்கு ஏற்றபடி வாழ்த்துக்களையும், வணங்குதலையும்
சமர்ப்பிகிறேன்.
இன்று இந்த நிகழ்வு முழுக்க யோகம் கற்க எண்ணமுடையவர்களுக்காக நடைபெறுகிறது.
அவர்களின் தேர்ந்தெடுத்த கேள்விகளுக்கு பதில் கூறும் விதமாக இந்த அமர்வு நடைபெற
இருக்கிறது. இதில் ஸ்வார்த்தம் சத்சங்க
மாணவர்களும் தாங்கள் விரும்பிய கேள்விகளை கேட்கலாம் என்றும் கூறிக் கொள்கிறேன்.
இதன் முன்னுரையாக சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் சரிதம் சிறிது கூற அவசியம்
ஏற்படுகிறது. ரிஷி மூலம் அறிவதில் தவறு இருந்தால் பெரியவர்கள் எம்மை
மன்னிக்கட்டும்.
மூல நட்சத்திரத்தில் அவதரித்த ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி இரண்டு வித
அம்சங்களை கொண்டிருக்கிறார்.
முதலாவதாக ஸ்ரீ பதஞ்சலி ஆதிசேஷன் அவதாரத்தில் ஸ்ரீமன் நாராயணனுக்கு சயனிக்கும்
படுக்கையாக இருந்து சேவை செய்து வருபவர் .
ஆதிசேஷன் என்றால் முன்னால் மிச்சமாக
இருந்தது என்று பொருள் . பிரபஞ்சத்தில் ஒவ்வொரு முறையும் ஏற்படும் மகா பிரளய
காலத்தில் அத்தனை உயிர்களும் , அத்தனை பஞ்ச பூத பொருட்களும் இறைவனோடு ,ஒடுங்கிய
நிலையில் மீதமாக இருந்தது ஆதிசேஷன் ஒருவரே.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களில் ராமாவதாரத்தில் ஸ்ரீ ராமருக்கு தம்பி
லெட்சுமனனாகவும் ,ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அண்ணன்
பலராமராகவும் அவதரித்தவர் நம்முடைய சத்குரு பதஞ்சலி மஹரிஷி .
மூன்றாவதாக உலகில் பல்வேறு சாஸ்திரங்களை ,வேதங்களை உலகிற்கு தர ஸ்ரீ பரமேஸ்வரன் திருவுளம்
கொண்டதால் நம் சத்குரு பதஞ்சலி மகரிஷியாக அவதரித்து ஆறு சாஸ்திரங்களில் இரண்டாவதான
யோக சூத்திரத்தையும் ஸ்ரீ பாணினி மஹரிஷி அவர்கள் அருளிய
கடினமான பதங்களை உடைய ஒலி இலக்கணத்திற்கு எளிதாக கற்கும் படியான வியாகரண பாஷ்யம்
என்ற சப்த இலக்கண நூலையும் , மூன்றாவதாக இவ்வுலக மானுடர்களுக்கு உடற்பிணி தீர்க்க
ஆயுர்வேத சாஸ்திரமாக சரகம் என்ற நூலையும் , இன்ன பிற அநேக நூல்களில் சிறப்பு
வாய்ந்த தமிழாய்வு, யோக முத்திரை, வான சாஸ்திரம் போன்ற நூல்களையும்
அருளியிருக்கிறார்.
என்றும் யோகத்தின் தந்தையாக விளங்கும் ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி
நமக்கு தந்த யோக சூத்திரம் அனைத்து யோக நூல்களுக்கும் அடிப்படையாக விளங்குகிறது
.இவரது சிறப்பு மற்றும் ரிஷி அம்சத்தில் இவர் வாழ்ந்த ஐந்து யுகங்கள் என கூறிக்
கொண்டே செல்லாலாம் .
ஓரளவு ரிஷி மூலத்தை நாம் நிறைவு செய்யும் பொழுது பதஞ்சலி யோகம்
..........................
சீடர் கமலக்கண்ணன் எழுப்பிய முதல் கேள்வி
யோகம் என்றால் என்ன ? யோகத்தின் பயன் என்ன ?
குருவின் பதில் –
தன்னை உணர்தல் அல்லது தன்னைத்தானே அறிந்து கொள்ளல் என்பதே யோகத்தின் பயன், யோக சித்தி என்பது தன்னை அறிந்துகொண்டபின் இறைவனோடு தன்னை பிணைத்துக்கொள்வது.
இதற்காக மிகப்பண்டைய காலம் தொட்டு மஹரிஷிஸ்ரீ பதஞ்சலியின் யோக சூத்திரங்கள்
கைவிளக்கென இருந்து வழிகாட்டி வந்திருக்கிறது.
சித்தசுத்தியின் மூலம் ஆன்மாவை அதன் தளையில் இருந்து விடுபடுத்திய நிலையில் இறைவனோடு இணைதல் யோகத்தின் குறிக்கோள்.யோகம்
என்றால் இணைதல் என்றுதான் பொருள்.
இறைவனை மையப்படுத்தியே பதஞ்சலியின்
யோக சூத்திரங்கள் அதன் தன்மையினை வெளிப்படுத்துகின்றன. ஒரு உணவினை உண்டால் அன்றி அதன் சுவையினை தெரிந்து கொள்ள முடியாது, அதே சமயம் சுவையே இல்லாத உணவினை உண்ண மனம் ஒருபோதும் விழையாது அல்லவா.
அதுபோல் அவரவர்
அனுபவத்தில் இறைவனின் உண்மைச்சுவையினை உணராதிருக்கும்வரை
இறைவனை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
முன்வினை ,மறுபிறப்பு என்ற கர்மாகோட்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கையும் அதன் சத்தான உண்மைகளையும்
கண்டறிந்து மானுடர்க்கு அறிவித்தவர்கள் ரிஷிகள் .
இவர்கள் வாழ்ந்த ஞானபூமி இந்த தென்னாடு.
ஒன்றில்லாமல் மற்றொன்று தோன்ற முடியாது என்பது இன்றைய விஞ்ஞானம் கண்ட உண்மை.
தோற்றுவிக்கப் படாமல் என்றும் ஒரு இருப்பாக உள்ளதே இறைவன். அவனாலேயே யாவும் தோற்றுவிக்கப்பட்டது என்று மெய்ஞானம்
கூறுகிறது.
எந்த ஒன்று அனைத்திற்கும் காரணமானதோ அந்த மூல காரணத்தை அறிவதனால் அதனின்றும்
தோன்றிய அனைத்து காரியங்களும் அறியத் தக்கதாய் இருக்கிறது.
அந்தக் காரணன் இறைவனாகும். அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் இந்த உலகிற்கும்
காரணமாக இருப்பதால் அந்த இறைவனை நாம் அறிய வேண்டியதாகிறது.
உபநிஷத்துகள் கூறுவது,
இறைவனிடமிருந்து ஐந்து பூதங்களின் தோற்றமும் ,உயிர், மனம் , உணர்வு போன்றவைகளின்
தோற்றமும் படைக்கப்பட்டதென்பதாகும்.
அந்த இறைவன் மனிதர்களிடம் ஆன்ம வடிவாக உள்ளதால் , உணர்வினால் அந்த ஆன்ம வடிவை
கண்டுணர்ந்து இறைவனையே அடைவதுதான் யோகத்தின்
லட்சியமும் ,செயலும் ஆகும் என ஸ்ரீ பதஞ்சலி யோகம் கூறுகிறது.
தொடரும்
No comments:
Post a Comment