யோக தரிசனம் -(ஒன்று )
இறைவனை மையப்படுத்தியே தனது யோக சூத்திரங்கள் அனைத்திலும் (இறைவன்-குரு -சாஸ்திரங்கள்) ஆகியவற்றின் அடிப்படையில், இறைவனோடு மனிதன் இணைந்து விடுதலே யோகவழி எனக் கூறுகின்றார்.
மனிதன் தன் மனம், சித்தம், அறிவு மூன்றையும் அதன் இயக்க இயல்புகளை நெறிப்படுத்தினால் விரைவில் இறைவனைக் காண முடியும். குருவின் மூலம் இறைவனின் தொடர்பைப் பெறலாம். இறுதியில் இறைவனோடு இணைந்து விடலாம் என்று ஆணித்தரமாக கூறி சாதகர்களைப் பக்குவப்படுத்தி தன் யோக தர்ஸனத்தால் அதனை சாத்தியப்படுத்தவும் எப்போது உதவுகிறார்.
யோக சூத்திரம் என்பது உண்மையின் உரைகல். இது விஞ்ஞான ரூபமானது, மிக சாத்தியமான ஒன்றை துல்லியமாக சாதகனுக்கு உணர்த்தி சாதகனோடு தன்னைப் பிணைத்துக் கொள்கிறார்.
ஒரு ஜீவரின் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமிய கர்மாக்களை முழுதும் அழித்துப் பிறவியற்ற பெருநிலையை அடைய அழைத்துச் செல்கிறார் என்பது உண்மையின் உண்மையாம்.
யோகக் கல்விமுறை
யோக சூத்திரப் பாடங்கள் என்பதைப் பொறுத்தவரை இந்நூல் ஒருபோதும் அறிவுரை, அறநெறி, நீதிபோதனை போன்றவற்றை போதிக்கும் ஒரு சாதாரண நூல் அல்ல !
மாறாக ஒவ்வொரு தனிமனிதனும் தன்னகத்தே கொண்டுள்ள இறைத்தன்மையை, அவனுக்கு உணர்த்தி அவனை ஒரு மாபெரும் சக்தியின் "தனித்துவம் ", "மகத்துவம் ", இறைவன் படைத்த ஏனைய உயிரிகளிலே அவனே உயர்ந்தவன். ஒப்பற்ற ஞானத்தைப் பெருக்கும் பேராற்றலைக் கொண்டவன் அசாதாரணமானவன் என்பதை அறிய வைத்து, அவனிடம், வேறு ஒரு சக்திப் பெட்டகம் (பேழை), ஆறாதார சக்தியால் எழுப்பக் கூடிய ' குண்டலினி சக்தி ' இருப்பதையும், அதனை இயக்கம் பிராணாயாமம் என்ற வாசிக்கலையையும் அவனுக்குக் காட்டி உணர்த்தி, அதைக் கற்றுக் கொடுக்கும் கல்வியே யோகக் கலை என்ற "அட்டாங்க யோகமே "ராஜ யோகக் கல்வி முறையாகும்.
இதனை வெகு நேர்த்தியாக போதிக்கும் வழியே யோக சூத்திரங்கள் " என்ற யோக தர்ஸன் ஆகும். இதனைப் பரிவுடன் மாந்தருக்கு அளித்த வள்ளல் சற்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் பாதங்களைப் போற்றிப் பரவுவோம்.
மனிதம் பிறவிப் பெருங்கடலில் மூழ்காது இருக்க, மனம் என்ற சித்தத்தின் ஆகுதி பொருளாய் ஆன்ம வேள்வியில் இடப்படும் இடுபொருளே
" யோக தர்ஸன் "
யோகக் கல்வியை கற்க காலவரை ஏதும் இல்லை. உண்மையில் குறுகிய கால பாடத் திட்டம் என்று எதுவுமில்லை. சரியை, கிரியை, ஞானம் , யோகம் என்ற முறையான படிநிலைகளைக் கடந்து வருவோருக்கு எளிதாக இருக்கலாம் எனினும் அதனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கற்று முடிக்க வேண்டும் என்று எண்ணுவதும் அவ்வித அவசரக் காரர்களுக்கு இது சற்று கடினமே !
யோகம் கற்கும் வாய்ப்பு கிட்டும் ஒவ்வொரு ஜீவரும் இறையருளைப் பெற்றவரே! தகுந்த சீடனுக்கு உயர்ந்த குருவானவர் தானாகவே வந்தமைவார் என்பதில் சந்தேகம் இல்லை.
வாய்த்தநல் குருவின் ஆசியுடன் அவரது அன்பு, கருணை, பேரருள் சித்திக்க அவரது பாதங்களைப் பணிந்து அவரிடம் சரணடைந்த சீடன் உயர்வடைவான் என்பதோடு ,
அசையாத நம்பிக்கை, தொடர் பயிற்சி, வைராக்கியம், திட சிந்தை, நல்லொழுக்கம் சார்ந்த பண்புகளை கொண்ட ஒரு சாதகனுக்கு இக்கல்வி வெகு எளிதானதும், நிச்சய வெற்றி அளிப்பதாயும் அமைவதோடு, குருவருளும் திருவருளும் ஒன்றிணைந்து அவனது பரஞானத்திற்கு உரமளித்து, உயிரளித்து சக்தி-சாதனை-சித்திகள் இறுதியில் இறைக் கலப்பை உண்டாக்கி முக்தியையும் பெறுவான். யோகச் செல்வனாகி யோகியாகி என்றென்றும் துய்க்கும் பேரானந்தம் என சற்குரு அருளுகிறார்.
சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோக சூத்திரங்கள் எனும் யோக வேதத்திற்கு பண்டைய காலம் தொட்டு பல மஹா புருஷர்களும் சாஸ்திர விற்பன்னர்களும் யோக பண்டிதர்களும், சமஸ்கிருத மொழியிலும், தமிழிலும் (பாஷ்யங்கள் ) உரை நூல்கள் எழுதியுள்ளனர்.
1. சுவாமி விவேகானந்தர்
2. மகாகவி பாரதியார் எழுதிய சமாதி பாத சூத்திரங்கள் விளக்கங்களின் இடையே
3. மதுரை ஸ்ரீ நாராயண அய்யர் என்பவர் (இவர் ஒரு சமஸ்கிருத வேத வித்தகரும், ஞான மார்க்கத்தில் சென்று ஞான சித்தி பெற்றவர் )
4. மேலும் ஸ்ரீமான் கடலங்குடி நடேச சாஸ்திரிகள் அவர்கள் பல சாஸ்திரங்களை ஆராய்ந்து யோக நுட்பங்களை தமது உரைநூலில் வெளியிட்டுள்ளார்.
அதோடு இம் மகான் பல பாஷயங்கள், பாஷ்ய விருத்திகள் கிரந்தங்கள் வேதங்கள், உபநிடதங்கள் ஸ்ரீ ஆதிசங்கரின் அடிப்படை யோக சாஸ்திரத்தின் சாரங்கள், இதர சாங்கியம் போன்ற சாஸ்திரங்கள் என அத்தனையிலும் உட்பகுந்து ஆராய்ந்து ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் உரைநூல் செய்துள்ளார்.
இவரின் புத்திரி ஸ்ரீமதி சரஸ்வதி அம்மையார் தன் தந்தையின் உடன் இருந்து கற்றுத் தேர்ந்தவர் . தந்தையாரின் வழியிலே சாஸ்த்திரியமாக இவர் எழுதிய சூத்திர உரையில் பெரும்பாலும் வடமொழி (சமஸ்கிருத) வார்த்தைகளை அதிகம் பிரயோகித்துள்ளார்
No comments:
Post a Comment